திரையரங்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை இதுவரை கண்டிருப்போமா? யாரேனும் கண்டிருக்கிறதாக சொன்னால் அவர்கள் அண்ட புழுகை ஆகாச புழுகை புழுகுவதாக சொல்லி கேலி செய்வோம். தமிழ்நாட்டில், கலை என்று நாடக வடிவம் எடுத்து பின்னல் சினிமா வடிவமாக உருமாறிற்றோ அன்றிலிருந்தே தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று சினிமா. அப்படி நம் வாழ்வோடு கலந்திருக்கும் சினிமாவை நாம் காண தடை விதித்திருக்கிறது புதிய ஜிஸ்டி வரிவிதிப்பு.
ஆயிரம் திரையரங்குகள் நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் ராமநாதன் 30 விழுக்காடு மாநில கேளிக்கை வரிவிதிப்பை முற்றிலுமாக ரத்து செய்ய கோருகிறார். மேலும் ராமநாதன் "நேற்றே ஜிஸ்டி அமலுக்கு வந்தமையால், நாங்கள் திரைப்படங்களை திரையிட்டால் மாநில வரிவிதிப்பை உடனடியாக செலுத்த வேண்டிருக்கிறது. இதில் கடுமையான நெருக்கடி இருப்பதால் வேறு வழியின்றி திரையங்கங்களை மூடுகிறோம்." என்றார்.
ஜூலை மூன்றாம் தேதியில் இருந்து திரையரங்களை மூடுவதாக திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தாலும், நேற்றே தமிழ்நாட்டில் பல திரையரங்கங்கள் முடங்கி போயின.
இராமநாதன் கூடுதலாக "நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு இருபத்தியெட்டு விழுக்காட, நூறு ரூபாய்க்கு குறைவாய் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு பதினெட்டு விழுக்காடு என்று ஜிஸ்டி வரிவிதிப்பு அமலாகியிருக்கும் நிலையில் மாநில கேளிக்கை வரிவிதுப்பு சேர்வது திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் சுமையை உண்டாக்குகிறது" என்றார். இந்நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரிவிதிப்பிலிருந்து தமிழ் சினிமா மீள்வதற்கு உறுதுணையாக இருப்பதாக தத்தம் டிவிட்டர் பக்கங்களில் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். பாடலாசிரர் மதன் கார்க்கி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இயக்குனர் ஷங்கர் இன்னும் பலர் வரிவிதிப்பு எதிராக குரலெழுப்பி வருகிறார்கள்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி "சினிமா துரையின் நலன் கருதி வரிவிதிப்பு சீர்படுத்தும் வரையில் நான் எழுதும் பாடல்களுக்கும், கதை வசனத்திற்க்கும் பதினைந்து விழுக்காடு என் சன்மானத்திலிருந்து குறைத்துக் கொள்கிறேன்." இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் " ஜிஸ்டி வரிவிதிப்பு பத்துலட்சம் குடும்பங்களை நசுக்குமென எதிர் பார்க்கவில்லை. இப்போது குரல் கொடுக்காவிட்டால் எப்போது குரல் கொடுப்பது?" "தமிழ்நாட்டில் திரையுலகிற்கு ஐம்பது விழுக்காடு வரிவிதிப்பு மிக அதிகம்" என்று ஷங்கர் இன்னும் பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திரையரங்கங்கள் மூட பட்டிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.